சுப்பிரமணியம் இராசரத்தினம்
மொழியியல் அறிவுரையாளர்
தெற்கு தமிழ்ப்பள்ளி - மேற்கு அவுஸ்திரேலியா
புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழும்
அகிலம் எங்கும் வாழும் பல்வேறு இனங்களும் தத்தம் தாயகமண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்றன என்பது வரலாறாகும். இவ்வாறு புலம்பெயர்ந்த இனங்களிற் சில தாம் குடியேறிய நாடுகளை ஆக்கிரமித்து, அடிமைப்படுத்தித் தமது அரசுகளை நிறுவி ஆட்சிசெய்தன.
ஆட்சி அதிகாரத்தின் மூலம் தத்தம் மொழி, கலை, பண்பாட்டை அந்நாட்டு மக்களிடையே புகுத்தி, அவற்றை உயர்ந்ததாக்கித் தமது இனத்திற்குப் பெருமை சேர்த்தனர். தம்மினமே உயர்ந்த இனம் என்னும் தோற்றத்தையும் உருவாக்கிக் கொண்டனர்.
இந்த வகையில் குறிப்பிடத்தக்கோர் ஐரோப்பியர் ஆவர். இவர்களில் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரைச் சிறப்பாகக் கூறலாம். மிகச்சிறிய தொகையிற் சென்ற இவ்வினத்தினர் மிகப்பெரும்பான்மையாக வாழ்ந்த அவ்வவ் நாட்டுமக்களை தத்தம் மொழிவழி ஆட்சிசெய்தனர்.
தாம் அடிமை கொண்ட நாடுகளின் செல்வங்களைச் சுரண்டித் தம்மையும் தமது நாட்டையும் வளமாக்கிக் கெகாண்டனர். தமது வாழ்க்கை முறை, ஆட்சிமுறை, நீதிமுறை ஆகியவற்றை அந்நாடுகளிற் புகத்திப் பெரும் பண்பாட்டுப் படையெடுப்பையே நிகழ்த்தி விட்டனர். இதன் விளைவாக இவர்களது ஆட்சியிலிருந்து விடுபட்ட பின்னரும், அடிமைப்பட்ட நாடுகளால் இன்றுவரை நிமிர்ந்து நிற்க முடியவில்லை.
புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் வேறு சில இனங்கள் தத்தம் மொழி, கலை, பண்பாட்டைப் பாதுகாத்துத் தமது அடையாளங்களை இழக்காது தமது தனித்துவத்தைப் பேணிக்காக்கும் அதேவேளையில், சமூகப்பொருளாதாரத் துறைகளிலும் மேம்பட்டு வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் பண்பாட்டு சிறப்பின் மூலமும் தத்தம் தாய்நாட்டின் சிறப்பியல்புகள் மூலமும் பிற இனங்களால் மதிக்கத்தக்க இனங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான இனங்களிற் குறிப்பாகச் சீனர், யப்பானியர், யூதர், இத்தாலியர், கிரேக்கர் ஆகியோரைக் கூறலாம். இவற்றுள் சீனா, யப்பான் ஆகிய இருநாடுகளும் ஐரொப்பிய ஆக்கிரமிப்புக்குச் சிறிதளவேனும் இடம் அளிக்காது வாழ்ந்த பெருமைக்குரியன.
யூத இனம் தமக்கென ஒரு நாட்டை எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டிருக்கவில்லை. ஏனினும் அவ்வினம் கடந்த 2500 ஆண்டுகளாகத் தமது தனித்துவத்தைப் பேணியதன் மூலம் பெருமைக்குரிய இனமாகத் திகழ்ந்து வருகின்றது.
மேற்கூறிய இரு தொகுதி இனங்களும் உலகில் பிற இனங்களால் மதிக்கத்தக்க இனங்களாகத் தத்தம் அடையாளங்களை இழக்காது கட்டொருமைப்பாட்டோடு வாழ்ந்து வருகின்றன. மேலும் உலகின் கலை, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் அன்ன பிற துறைகளின் மேம்பாட்டிற்கு உதவிப் பிற இனங்களால் போற்றுதற்குரியனவாகவும் விளங்குகின்றன.
அடுத்துப் புலம்பெயர்ந்த இக்குழக்களில் ஒன்றான ஆபிரிக்க நாடுகளும் ஐரோப்பியர்களால் அடிமை கொள்ளப்பட்ட காலத்தே, ஆபிரிக்க மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாக அல்லது கூலிகளாகப் புலம்பெயர்த்தப்பட்டனர்.
சில ஆபிரிக்க இனங்கள் சொந்த நாட்டிலேயே தமது மொழியை இழந்தனர். சில இனங்களின் மொழிவளர்ச்சி குன்றியது. துமது அடையாளத்தைத் தொலைக்கும் அளவுக்குத்தம்மை ஆண்ட இனங்களின் மொழி, பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டன.
பல்வேறு நாடுகளில் தனித்துவமான மொழி, கலை, பண்பாட்டைக் கொண்டிருந்த ஆபிரிக்க மக்கள் குடியேற்றப்பட்ட நாடுகளில் முற்றாக இவற்றை இழந்து தமது தனித்துவமான அடையாளத்தை இழந்துவிட்டனர். இன்று இம்மக்கள் “ஆபிரிக்கர்” அல்லது “கறுப்பினத்தவர்” என்ற அடையாளத்தை மட்டுமெ கொண்டுள்ளனர்.
மேற்கூறிய வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்வது “எந்தவொரு இனம் தனது மொழி, கலை, பண்பாடு என்பவற்றைப் பேணித்தன் அடையாளத்தை இழக்காது வாழ்கின்றதோ அந்த இனமே பிற இனங்களால் மதிக்கப்படும்” என்பதாகும்.
இதனை நன்கு உணர்நது கொண்ட தமிழர்கள் தமது அடுத்த தலைமுறையினர் தமிழ்மொழியினையும், அதனூடு தமிழர்தம் வாழ்வியலையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்மொழியைக் கற்பித்து வருகின்றனர்.
தமிழர் புலப்பெயர்வு பலகால கட்டங்களில் நடைபெற்றபோதும் 1980களில் இடம்பெற்ற ஈழத்தமிழர் புலம்பெயர்வினால் உருவாகிய புலம்பெயர் தமிழர்களை மாத்திரம் எடுத்து நோக்குவோம்.
உலகநாடுகள் பலவற்றிலும் குடியேறிய இவர்கள் தத்தமது நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கத் தொடங்கினர். இவர்களுக்கு அவர்கள் வாழும் நாடுகளின் அரசுகள் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்குரிய வசதிகளை உருவாக்கிக் கொடுத்து உள்ளன.
இருப்பினும் காலவோட்டத்தில் தமிழ்மொழி கற்பித்தல் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி இருக்கின்றது.
இவற்றுக்குரிய காரணங்கள்:
கிட்டத்தட்ட 2000 ஆண்டு வரை தமிழ்மொழியைக் கற்கவரும் மாணவர்கள் தமிழ்மொழியைப் பேசத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் 2000த்தின் பின்னர் தமிழ்மொழியை வீட்டில் பேசும் தன்மை குறைந்து அந்தந்த நாட்டுமொழியையே இன்றைய மாணவர்கள் பேசுவோராக உள்ளனர்.
தமிழ்மொழியை நன்கு பேசத்தெரிந்தோர்க்கு தமிழ்மொழியை கற்பித்துப் பழக்கப்பட்ட ஆசிரியர்களும், அக்கற்பித்தல் முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட நூல்களுமே இன்று உள்ளமை.
இதனால் மேல்வகுப்புக்களை நோக்கி மாணவர்கள் செல்லும்போது தமிழ்மொழிக்கல்வியை விட்டு விலகிச் செல்லும் நிலையே காணப்படுகின்றது. இதற்கு அடிப்படையாக இருப்பது தமிழ்மொழியை வாசிக்கத் தெரிந்தபோதும் அவற்றின் பொருள் முழமையாகப் புரியாது இருப்பதே.
இந்நிலையில் நாம் செய்யவேண்டியது என்ன? உலகில் பிறமொழியினர் தமது மொழியைக் கற்பித்தலுக்கு என இரண்டு முறைகளைக் கொண்டுள்ளனர்.
1) நன்கு பேசத்தெரிந்தவர்களுக்கு அம்மொழியை கற்பிப்பதும் அதற்கான வழிமுறைகளும் – இதனை முதல்மொழி முறை என்பார்கள்.
2) நன்கு பேசத்தெரியாத அல்லது முற்றிலும் புதிய ஒரு மொழியைக் கற்பது – இதனை இரண்டாவது மொழி முறை என்பார்கள்.
எனவே இன்று எமக்கு தேவையானது (1) இரண்டாவது மொழி முறை மூலம் தமிழைக் கற்பிப்பதற்கான (அ) நூல்கள் (ஆ) இரண்டாவது மொழி கற்பித்தல் முறைமையில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள்.
இவற்றை உருவாக்கும்போது நாம் பின்வரும் விடயங்களில் தெளிவு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
1) முதல்மொழி என்றால் என்ன?
2) இரண்டாவது மொழி என்றால் என்ன?
3) முதல்மொழிக்குரிய நூல்கள் எப்படி இருக்கும்?
4) இரண்டாவதுமொழிக்குரிய நூல்கள் எப்படி இருத்தல் வேண்டும்?
5) முதல்மொழிக்குரிய கற்பித்தல் திறன்கள் எவை?
6) இரண்டாவது மொழிக்குரிய கற்பித்தல் திறன்கள் எவை?
7) முதல்மொழி நூல்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்?
8) இரண்டாவதுமொழி நூல்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்?
மேற்கூறிய கேள்விகளுக்கு முழுமையான பதிலை நாம் தெரிந்துகொள்ளல் மிகமிக அவசியம்.
தமிழ்மொழி கற்றலைச் சுமையாக மாணவர்கள் கருதாது, கற்றல் இலகுவானது, இனிமையானது என்பதை எமது கற்பித்தல் முறைமை மூலம் உணர வைப்போம். அவற்றிற்குத் துணை செய்யக் கூடியவாறு மொழியியலை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது மொழியாகத் தமது மொழியைக் கற்பிப்பதற்காக ஒவ்வொரு இனமும் கையாழும் முறைகளில் தமிழ்மொழியின் இயல்புக்கும் எமது சூழலுக்கும் ஏற்ப உள்வாங்கக் கூடியவற்றை உள்வாங்கி நூல்களை உருவாக்கல் வேண்டும்.
அந்நூல்களை எவ்வாறு கற்பிப்பது என்பது பற்றிய நடைமுறையையும் நாம் பட்டறைகள் மூலமும் கருத்துப் பரிமாற்றத்தாலும் தெளிவு பெற்று கற்பிக்கும்போது வெற்றி பெறுவோம்.
தமிழ்மொழியியலை நாமும் உணர்ந்து பிறரையும் உணரவைப்போம்..
தமிழ்மொழி கற்பித்தலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்வோம்.