நவரட்ணம் ரகுராம்
சிட்னி
ஆண்டு 12 ATAR பரீட்சைக்கு தமிழை எடுப்பது நன்மையா?
இந்தக் கேள்வி பல பெற்றோர்களின் மனதில் எழுந்திருக்கும். எமது சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சமூகம். அந்த வகையில் தமது பிள்ளைகளின் கல்வி மீதும், அவர்கள் தெரிவுசெய்யும் பாடங்களின் மீதும் பெற்றோர்களிற்கு அதீத அக்கறை இருப்பது ஒன்றும் வியப்பல்ல. ஆரம்பப்பள்ளி, பின்னர் உயர் பள்ளியில் பிற மொழிகளை ஒரு பாடமாக மாணவர்கள் கற்பதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அதேவேளை, தமிழர்களாக நாங்கள் எங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் சிறு வயதிலேயே இணைத்து மொழிக்கல்வியை வழங்கி வருகின்றோம். அவுஸ்திரேலியாவில் இருக்கும் தமிழ் மக்கள் தொகையோடு ஒப்பிடும்பொழுது தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை போதுமா என்றொரு கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் அதற்குள் செல்வது நான் சொல்லவரும் விடயத்தை சிதைத்துவிடும் என்பதனால் வேலியோரமாகவே நடந்து செல்ல விரும்புகின்றேன். இப்பொழுது கேள்வியென்னவென்றால் ஆண்டு 12 ATAR பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுப்பது தேவையா? நன்மையா? என்பது தான்.
எனது இரு புதல்வர்களும் தமிழை ஒரு பாடமாக ஆண்டு 12 எடுத்தவர்கள் என்ற ரீதியிலும், ATARற்கு தமிழை ஒரு பாடமாக எடுக்கும் ஆண்டு 10,11,12 மாணவர்களிற்கு பிரத்தியேகமாக தமிழ் கற்பிப்பவன் என்ற வகையிலும் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். அவுஸ்திரேலியாவில் ஆண்டு 12 தமிழ் பரீட்சையென்பது நாம் எமது ஊரிலே தோற்றிய பரீட்சைக்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கு பரீட்சையை இரண்டாக பிரித்திருக்கிறார்கள். வாய்மொழித் தொடர்பாடல் என்ற பகுதிக்கு 25 புள்ளிகளும், எழுத்துப்பரீட்சைக்கு 75 புள்ளிகளும் வழங்கப்படுகின்றது. இந்த எழுத்துப் பரீட்சையில் 30 விகிதமான பதில்கள் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். அதாவது அதற்கான ஒலிப்பகுதியோ, பந்தியோ தமிழில் இருக்கும், ஆனால் பதில்கள் ஆங்கிலத்தில் எழுதவேண்டும். மேலும் வாய்மொழித் தொடர்பாடலில் 10 புள்ளிகள் உரையாடலிற்கும், 15 புள்ளிகள் மாணவர்கள் தாம் தெரிவுசெய்த ஒரு தலைப்பிலான ஆராய்ச்சிக்கும் வழங்கப்படுகின்றது.
எழுத்துப் பரீட்சையை பார்த்தோமேயானால் 30 புள்ளிகள் கேட்டுப் பதிலளித்தல் பகுதிக்கும், 10 புள்ளிகள் வாசித்துப் பதிலளித்தலிற்கும், 15 புள்ளிகள் வாசித்துப் பதிலளித்தலின் எழுத்துப் பகுதிக்கும், 20 புள்ளிகள் கட்டுரைப் பகுதிக்கும் வழங்கப்பபடுகின்றது. இதனைப் பார்க்கும்பொழுது ஒரு மாணவனின் பல்வேறுபட்ட திறமைகளை பரிசோதிக்கும் ஒரு பரீட்சை வடிவமாகத்தான் எழுத்துப் பரீட்சை அமைக்கப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள் வடிவமைப்பு, கேள்விகள் போன்ற விடயங்களை இந்த இணைப்பில் சென்று நீங்கள் பார்வையிடலாம் https://www.vcaa.vic.edu.au/
ATAR என்று வரும்பொழுது தமிழ்ப் பாடம் 2 பகுதிகளாக (units) கணக்கிடப்படுகின்றது. ஆகவே மாணவர்கள் அதற்கான வகையில், தரத்தில் தம்மை தயார் படுத்துவது மிக அவசியமாகின்றது. ஆண்டு 12 பரீட்சையில் திறமையாக சித்தி பெறுவதற்கு தமிழ் ஒரு இலகுவான வழி என்ற சிந்தனை பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் முளைவிடுவது ஆபத்தானதாகவே இருக்கும். எனினும் தமிழ் மொழி கற்பித்தல் என்பது ஒரு புறமிருக்க மாணவர்களிற்கான ஒரு ஆதரவை கல்வியிலும் சரி, பயிற்சிகளிலும் சரி பெற்றோர்கள் வழங்கக்கூடியதாக இருக்கும். ஏனெனில் பெரும்பான்மையோர் தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்றவர்கள், ஆகவே இங்குள்ள தமிழ் மொழிப்பரீட்சையென்பது அவர்களிற்கு பெரும் சவாலாக இருக்காது. இது என்னைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய வரப்பிரசாதமான விடயம். மேலும் accelerator பாடமாக தமிழை ஆண்டு 11 இல் எடுக்கமுடியும். இதனால் ஆண்டு 12 இல் மாணவர்களிற்கான அழுத்தம் சற்று குறைவடையும். அதுமட்டுமல்ல 11ம் வகுப்பில் தமிழை எடுப்பதென்பது ஆண்டு 12 பரீட்சைக்கான ஒரு ஒத்திகையாக இருக்கும். தாம் எவ்வளவு நேரத்தை செலவிட்டால் எந்த அளவில் பலன் வருமென்பதை அளப்பதற்கு தமிழ்ப் பரீட்சை ஒரு அளவுகோலாக அமைகின்றது. இந்த அளவுகோலை வைத்து அடுத்த ஒரு வருடத்திற்குள் தம்மை திருத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் மாணவர்களிற்கு ஏற்படும். அதுமட்டுமல்ல ஆண்டு 12 பரீட்சை முடித்து பல்கலைக்கழக அனுமதிக்கு போகும் பொழுது சில பல்கலைக்கழகங்கள் மொழியை ஒரு பாடமாக எடுத்து சித்தியடைந்தவர்களிற்கு மேலதிக ஊக்கப்புள்ளிகளை அதாவது bonus points வழங்குகின்றது.
அதுமட்டுமல்ல பல்கலைக்கழக நேர்முகப்பரீட்சைகளின் பொழுது தாய்மொழியை ஒரு பாடமாக ஆண்டு 12ல் எடுத்து சித்தியடைந்த மாணவர்களிற்கு தெரிவில் ஒரு முன்னுரிமை அளிக்கப்படும் சந்தர்ப்பங்களும் நிகழ்ந்திருக்கின்றது.
இவற்றிற்கு அப்பால் இந்த நாட்டிலே எம்மை தமிழராக அடையாளப்படுத்துவதற்கும், அடுத்த சந்ததிக்கு தமிழை கொண்டுசெல்வதற்கும் இளையோர்கள் தமிழ் மொழியை கற்பதுமட்டுமல்ல, அதனை ஒரு பாடமாக ஆண்டு 12இல் எடுப்பதும் மிக முக்கியம்.
ஆகவே பெற்றோர்களாக பிள்ளைகளை தமிழ் மொழியில் ஆர்வத்தை தூண்டி ஊக்கப்படுத்தவேண்டியது எமது கடமையாகும். இன்றும் எனது பிள்ளைகள் சரளமாக எம்மோடு தமிழ் பேசும்பொழுது ஏற்படும் மகிழ்விற்கு எல்லையில்லை. எனது மாணவர்கள் அறிவிப்பாளர்களாக அழகு தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்பொழுது “தமிழ் மெல்லச் சாகும்“ என்று சொன்னவர்களின் வாக்கு பொய்த்து தமிழ் எங்கும் ஒலிக்கும் என்று ஓங்கி கூச்சலிடவேண்டும் போல் இருக்கின்றது. எத்தனையோ துயர்கள், வலிகளைத் தாண்டி வந்திருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு தமிழை கற்பிப்பது எமக்கு பெரிய சவாலல்ல. ஒன்றிணைவோம், கரம்கொடுப்போம் எமது இளைய சந்ததியினரிற்கு நாம் தமிழர்கள் என்றும், என்றும் ஓயமாட்டோம் என்றும் ஓங்கி உரைப்போம்.